×

சிவகாசி பட்டாசு குடோன் வெடி விபத்தில் 2 பெண்கள் பலி!: மூலப்பொருட்களை கள்ளத்தனமாக வழங்கிய தொழிலதிபர் கைது...உரிமையாளர் தலைமறைவு..!!

விருதுநகர்: சிவகாசியில் கடந்த 15ம் தேதி பட்டாசு விபத்து ஏற்பட்டது தொடர்பாக தொழிலதிபர் மணிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ரிசர்வ் லைன் சிலோன் காலனியில் மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கான பேப்பர் குழாய் கம்பெனி உள்ளது. 2 மாடியாக உள்ள இந்த கட்டிடத்தில் அண்டர்கிரவுண்ட் குடோனாகவும், மேல்தளம் பேன்சி ரக பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் பேப்பர் குழாய் தயாரிக்கும் பணிகளுக்கும், மேல்மாடி வீடாகவும் பயன்பாட்டில் இருந்துள்ளது.

அண்டர்கிரவுண்டில் அனுமதியின்றி ஏராளமான பேன்சி ரக பட்டாசு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு, குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து, தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் வேலுமுருகன், மனோஜ் குமார் ஆகிய தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சிவகாசி, விருதுநகர் தீயணைப்பு துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கட்டிட இடிபாடுக்குள் சிக்கி சமீதா என்ற 55 வயது மூதாட்டியும், கார்த்தீஸ்வரி (33) என்ற பெண்ணும் உயிரிழந்தனர்.

இந்த வெடிவிபத்தில் பட்டாசுகளை பதுவித்த உரிமையாளர் ராமநாதன் அவரது மனைவி பஞ்சவர்ணம், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை தயாரிக்க மூலப்பொருட்களை கள்ளத்தனமாக வழங்கிய தொழிலதிபர்கள் மாரிமுத்து, அவரது சகோதரர் மணிராஜ் ஆகியோர் மீது சிவகாசி நகர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை பட்டாசு தொழிலதிபர் மணிராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மணிராஜ் சகோதரும் பட்டாசு ஆலை உரிமையாளருமான மாரிமுத்து தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். வெடிவிபத்துக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ராமநாதன் அவரது மனைவி பஞ்சவர்ணத்தையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Otighazi ,Fireworks , Sivakasi firecracker, businessman arrested
× RELATED பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!